Astro Ponggu Tamil 2018
11
January
2018

Astro Ponggu Tamil 2018

15-க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளோடு கலைக் கட்டிய அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’

பாரம்பரிய கலைகளை மேம்படுத்தி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அஸ்ட்ரோவின் ‘பொங்கு தமிழ்’ விழா ஜனவரி 7-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் மாலை 3 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து மக்களின் பேராதரவோடு நடைபெற்று வரும் பொங்கு தமிழ் நிகழ்ச்சி ஒரு வருடாந்திர விழாவாகும். மறக்கப்பட்ட எண்ணிலடங்க நாட்டுப்புற கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் ஒரு பிரம்மாண்ட மேடையமைத்து தருவது அஸ்ட்ரோவின் பொங்கு தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாலை 3 மணியளவில் தொடக்கிய பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் மக்கள் செல்வம் நடிகர் விஜய் சேதுபதி, அருண் பாண்டியன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். அவர்களுடன் அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, தயாரிப்பாளர் ராஜேஸ் குமார், ஜூங்கா திரைப்படத்தின் இசையமைப்பாளர் சித்தாத் ஆகியரும் கலந்து கொண்டனார்.

அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், ‘‘மறக்கப்பட்ட நமது கலாசாரம், பாரம்பரிய விளையாட்டு, கலை, ஆகியவற்றுக்கு கடந்த ஆறு வருடங்களாக அஸ்ட்ரோ பொங்கு தமிழ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நம் சங்க கலைக்கு உயிர் கொடுத்து வருகிறது என்பது நினைக்கும் போது பெருமையாகவுள்ளது”, என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, வீர விளையாட்டு மற்றும் சிலம்பம் போட்டியும் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி, பொது மக்கள் பங்கெடுக்க பொங்கல் வைத்தல், உரி அடித்தல், கோலம் போட்டிகள் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிற்கும் வகையில் இரவு 7.00 மணிக்கு பொங்கு தமிழ் கலைநிகழ்ச்சியில் ஆரம்பமாகியது. இக்கலைநிகழ்ச்சியில் நம்முடைய உள்ளூர் பாடகர் ரூபன் ராஜ், பாடகி டர்ஷனி, தமிழகத்திலிருந்து பிண்ணனி பாடகர் அந்தோணிதாசன், அவரின் துணைவியர் ரீதா அந்தோணிதாசன் படைப்புகளும் இடம்பெற்றது. அண்மையில் அனிருத் இசையில் அந்தோணிதாசன் பாடிய சொடக்கு பாடல் பொங்கு தமிழ் கலைநிகழ்ச்சியில் பாடி பொது மக்களின் கைத்தட்டல்களைப் பெற்றார்.

இதனைத் தவிர்த்து, சிலம்பாட்டம், கரகாட்டம், புலி ஆட்டம், மயிலாட்டம், காலையாட்டம், பொய்க்கால் குதிரை என 15-க்கும் அதிகமான கிராமிய கலைகளின் படைப்பு பொங்கு தமிழ் கலைநிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு சென்ற பயிற்சி பெற்ற நம்முடைய கலைஞர்கள் தங்களுடைய சிறப்பான படைப்புகளை இந்நிகழ்ச்சியில் நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியை ராகாவின் அறிவிப்பாளர் சுரேஷ், விழுதுகள் கபில் மற்றும் அகலியா மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு அஸ்ட்ரோ உலகம் முகநூலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோ வாயிலாக இந்நிகழ்ச்சியை இரவு 9.30 மணிக்கு கண்டு மகிழலாம்.