ஆஸ்ட்ரோ வானவில் “மகளிர் மட்டும்” குறும்படப் போட்டி : ‘பயணி’ வெற்றி வாகை சூடியது
குறும்படத் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அதை வேளையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் புதிய இளம் பெண் இயக்குனர்களுக்குச் சிறந்த ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்க ஆஸ்ட்ரோ வானவில் “மகளிர் மட்டும்” என்ற குறும்படப் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போட்டியில் சுஜித்திரா தேவி அருணகிரி தேவா இயக்கத்தில் ‘பயணி’ குறும்படம் முதல் இடத்தை வென்று ரிம 10,000 தட்டிச் சென்றது.
அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “மகளிர்களுக்காக முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குறும்படப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களின் படைப்புகள் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. அவர்களுக்கான அங்கீகாரத்தையும் சன்மானத்தையும் வழங்க வேண்டும் என்ற தலையாய நோக்கத்தில் இப்போட்டியை நாங்கள் ஏற்பாடு செய்தோம்”, என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி தொடக்கம் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இணைய பதிவுகளில் மொத்தம் 31 குறும்படங்கள் கலந்து கொண்டன. அவற்றுள் 18 குறும்படங்கள் மட்டுமே போட்டிக்குத் தகுதிப் பெற்றது.
அதிலிருந்து 11 குறும்படங்கள் தேர்தெடுக்கப்பட்டு கதை, தயாரிப்பு வடிவமைப்பு, காட்சி மற்றும் ஒலி அமைப்பு, படத்தொகுப்பு ஆகிய அடிப்படையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டது. அடிப்படை விதிகளைப் பூர்த்திச் செய்யாததால் எஞ்சிய 7 குறும்படங்கள் இப்போட்டியிலிருந்து நிக்கப்பட்டது.
அவ்வகையில் முதல் இடத்தை ‘பயணி’, இரண்டாம் இடத்தை ‘விட்டில் பூச்சிகள்’ மற்றும் மூன்றாம் இடத்தை ‘நறுமுகை’ ஆகிய குறும்படங்கள் வென்றது. இக்குறும்படங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-ல் ஒளிபரப்படும்.
ஆஸ்ட்ரோ வானவில் “மகளிர் மட்டும்” குறும்படப் போட்டி வெற்றியாளர்கள்
முதல் நிலை : ‘பயணி’ | சுஜித்திரா தேவி அருணகிரி தேவா| ரிம 10,000
இரண்டாம் நிலை : ‘விட்டில் பூச்சிகள்’ | பூந்தென்றல் வீரன்|ரிம 7,000
மூன்றாம் நிலை : ‘நறுமுகை’ | எலிசபெத் கிரேஸ் சுப்ரமணியம் | ரிம 5,000
ஆறுதல் பரிசுகள் (ரிம 2,500)
1) ‘கண்ணம்மா’ - தேவிகா செல்வம்
2) ‘காபி’ (Coffee) - கஸ்தூரி ஆறுமுகம்
3) ‘பிறவி’ – ஜீவா ரோஷினி கோவிந்தசாமி
4) ‘உன்னாலே’ – திலகாவதி விண்டசலைவடி
5) ‘மனைவி’ - ரேஷ்மாஸ்ரீ வெங்கிடாசலம்
6) ‘என் கணவன் ஒரு பிளேபாய்’ - மாலினி சண்முகம்